கந்தன்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளி
கந்தன்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளிபுதிய தலைமுறை

சென்னை | படிப்பு வரவில்லை என கூறி மாணவனை வெளியேற்றிய அரசுப் பள்ளி.. அதிரவைக்கும் பின்னணி!

அனைவருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி என பள்ளிக் கல்வித்துறை பேசும் நேரத்தில், கல்வியில் பின்வரிசையில் இருக்கும் மாணவர்களை நூதனமாக நீக்கும் நடவடிக்கை தலைநகர் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.
Published on

செய்தியாளர்: முருகேசன்

சென்னை பெருங்குடி அடுத்த கந்தன்சாவடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன், வேறு எங்கு படிப்பது என தெரியாமல் தவித்து வருகிறார். அவருக்கு கற்கும் திறன் குறைவாக இருப்பதாகக் கூறிய ஆசிரியர்கள், ஐடிஐ-யில் சேர்த்து விடுமாறும் மடைமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட மாணவன்
பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட மாணவன்புதிய தலைமுறை

100% தேர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வுக்கு முந்தைய வகுப்பில் தேக்கி வைப்பதும், டி.சி. கொடுத்து வெளியேற்றுவதும் அரசுப் பள்ளியில் நடக்காத ஒன்று. அதை கந்தன்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளி செய்ததாகக் கூறுகின்றனர் மாணவனின் பெற்றோர்.

ஆனால், கற்றலில் முந்தி இருக்கும் மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, 10ஆம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி இலக்கை எட்டும் நோக்கில், இப்படி மாற்றிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.

கல்வியின் அவசியம் கருதி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், அறிவொளி இயக்கம், முதியோர் கல்வி என பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுதான், இல்லம்தேடி கல்வி வரை நீண்டிருக்கிறது.

மாணவனின் பெற்றோர் நம்மிடையே கூறுகையில், "படிப்பு வரல... ஐடிஐ-ல சேத்துவிடுங்கன்னு சொல்லி, டி.சி.வாங்க வச்சாங்க. இப்ப, ஐடிஐக்கு போனா அங்கு அட்மிஷன் முடிஞ்சிருச்சு-ன்னு சொல்றாங்க. ஐடிஐ-ல கூப்ட்டா உண்டு... இல்லன்னா அவ்ளோதான்"- என்கிறார் வேதனையுடன்.

மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தி, தட்டிக்கொடுத்து அழைத்துவரப்பட்ட காலம் மறைந்து, குற்ற உணர்ச்சி ஏற்படுத்தி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியது மிகப் பெரிய கொடுமை. இதில், தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com