புதிய கல்விக் கொள்கை பற்றி பரிந்துரைகள்... முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் குழு

புதிய கல்விக் கொள்கை பற்றி பரிந்துரைகள்... முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் குழு
புதிய கல்விக் கொள்கை பற்றி பரிந்துரைகள்...  முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் குழு

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு புதிய கல்வி நடைமுறைகள் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்தது. அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, இருமொழி கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை தெரிவிக்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகளை வழங்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார். "புதிய கல்விக் கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக்குழு, கொள்கைவழியாகச் சென்று சாத்தியமான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com