அரசின் திட்டங்கள் விரைவாக மக்களிடம் சேர வேண்டும்: முதல்வர் பழனிசாமி
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு தாமதமின்றி சென்று சேர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ரோஹிணி, எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், ரேஷன் பொருள் விநியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவற்றை தேவையான அளவு வழங்கவும், சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினார். குறிப்பாக, நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்து, பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நிலவேம்பு குடிநீரை பள்ளி-கல்லூரிகள், சந்தைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை காலதாமதமின்றி சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.