புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கல்லூரி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பு அமர்ந்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.