திடீரென முறிந்த பிரேக் கம்பி : பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த அரசுப் பேருந்து
ஓசூரில் பிரேக் முறிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்து பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செல்லும் அரசு விரைவுப் பேருந்து நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஓசூர் சென்றடைந்த அப்பேருந்து பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பணிமனைக்குச் சென்றது. அங்கே இட வசதி இல்லாத காரணத்தால், பேருந்தை நிறுத்த இடமில்லை என அதிகாரி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மூன்று அரசு விரைவுப் பேருந்துகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நான்காவதாக இப்பேருந்தை நிறுத்த ஓட்டுநர் வெளியே ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பிரேக் முறிந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய பேருந்து, பின்னர் லாரி ஒன்றின் மீது மோதி நின்றிருக்கிறது.
இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பணிமனையில் போதிய இடவசதி இல்லாததும், பேருந்துகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

