“உங்க அப்பன் வீட்டு வண்டியா?” பேருந்தை நிறுத்துவதில் பிரச்னை... பெண்ணிடம் கடுமையாக பேசிய ஓட்டுநர்!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை தட்டி கேட்ட பெண்ணை பார்த்து ஓட்டுநர், “இது உங்க அப்பன் வீட்டு வண்டியா” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அரசு பேருந்து ஓட்டுநர்.
govt bus driver
govt bus driverpt

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யங்கொள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படியான ஒரு பேருந்து, அய்யன்கொள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அங்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பேருந்து வந்தும் அது அங்கு நிற்காமல் சென்றதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார் அப்பெண்.

பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட ஓட்டுநர்
பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட ஓட்டுநர்

சம்பந்தப்பட்ட அந்தப்பேருந்து, அடுத்த நிறுத்தமான அய்யன்கொள்ளியில் நின்றுள்ளது. இதற்கிடையே அங்கிருந்த ஜீப்பைப்பிடித்து பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண்மணி, பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். “கைக்குழந்தையோடு 4 மணி நேரமாக காத்திருக்கிறேன். கையைக்காட்டியும் வண்டியை ஏன் நிறுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு மிகக்கடுமையாக பதிலளித்த அவர், “நீங்க கையை எல்லாம் காட்டவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் “இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” என்று கேள்வி எழுப்பி கடுமையாக நடந்துள்ளார். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், சம்மந்தப்பட்ட ஓட்டுநர் மிது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இதனிடையே, “ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூடலூர் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சமூக வலைதளம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com