நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை திங்கள்கிழமை நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “பாராளுமன்றம் என்பது விவாதங்களுக்குடையது. அதை முடக்குவதால் மக்களுக்கு வேண்டிய பலவற்றை பேச முடியாமல் போகும்” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12வது மாணவர் தலைமையேற்பு விழா 2023ல் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு தலைமை பொறுப்பேற்கும் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பதவி ஏற்பு செய்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை வரவேற்கத்தக்கது. அவர் தமிழகம் வருவது அரசியல் ரீதியான வருகை அல்ல. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திற்கு சென்று நூல் வெளியிடுகிறார். அப்துல் கலாம் இல்லத்திற்கு நமது உள்துறை அமைச்சர் செல்வது நமக்கு பெருமை” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “கலாம் இரண்டாவது முறை நம் நாட்டிற்கு ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டும். சில அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக இவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியவில்லை. தமிழகத்தில் உள்ள சில அரசியல் காரணத்தாலும், தமிழர்கள் அவருக்கு ஆதரிக்காததாலும் மீண்டும் அவர் ஜனாதிபதியாக முடியவில்லை என்பதை மறுக்க முடியாது. தமிழகம், பாரத தேசம் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும் என்பது தான் அனைவரது கனவாக இருக்க முடியும்.
பலரை பல விஷயங்கள் தூங்க விடாமல் செய்து இருக்கிறது. கொள்கைகளும் நாம் எட்ட வேண்டிய உயரங்களும், தாண்ட வேண்டிய தடைகளும் நம்மை தூங்கவிடாமல் இருக்க வேண்டும். ஆளுநராக இருப்பதால் அரசியல் கருத்து சொல்ல முடியாது. சாதாரண குடிமகளாக நாடாளுமன்றத்தில் நமக்கு வேண்டிய விவாதம் நடைபெற வேண்டும், வேண்டிய மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்குடையது. அதை முடக்குவதால் மக்களுக்கு வேண்டியதை பலவற்றை பேச முடியாமல் போகும் என்பது ஒரு பொதுநல வாதியாக எனது கருத்து” என்றார்.