"என்னுடைய ஆசிரியரின் கால்களை அழுத்தி, சேவை செய்துதான் கல்வி கற்றேன்" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் ’எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒன்பதாவது தொடரில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்...
”பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் ஒரு நாளைக்கு 8 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்வேன். அப்போது நான் என்னுடைய குருவான ஆசிரியரின் வீட்டில் தண்ணீர் இறைத்து, அவருக்கு கால்களை அழுத்தி சேவை செய்து கல்வி கற்று வந்தேன். இது நம்முடைய பாரம்பரியம். இது பல ஆயிரமாண்டு காலமாக இருந்து வந்தது. நமது நாட்டில் காலம் காலமாக ஆசிரியர்கள் என்று தான் கூறி வருகிறார்கள். ஆனால், அவர்களை மரபுபடி ’குரு’ என்று அழைக்க வேண்டும்.
வெறும் மதிப்பெண்களை வாங்க வைப்பது மட்டும் ஆசிரியர்களின் கடமை அல்ல. அந்த மாணவனை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமை. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் பொறுப்பு அதிக அளவில் உள்ளது. நாட்டை வளர்ப்பதிலும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதிலும் ஆசிரியர்களின் பங்கு உள்ளது. மாணவர்களுடன் கலந்துரையாடிய போது அவர்களது கனவு என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மாணவனும் நாட்டினுடைய சொத்து. இந்தியாவில் பெண் ஆசிரியர்கள் அதிக அளவில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மகாகவி பாரதியாரின் கவிதைகளை தற்போது படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பாரில் பட்டங்களை ஆள்வதும் - சட்டங்களை ஆள்வதும் பெண்கள் என பாரதியார் கவிதைகளை மேற்கொண்டினார். பெண் பிள்ளைகள் படிக்க வரும்போது, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதுவெல்லாம் ஒரே நாளில் மாறிவிடாது. ஆனால், ஒருநாள் மாறும். பெண்கள் தங்கம் வெல்கிறார்கள். பட்டம் வாங்குகிறார்கள். அதன் பிறகு அவருடைய வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஒரு சில சமயம் பொருளாதார ரீதியில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மனிதன் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருக்கிறான். ஆனால், artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) மிகவும் ஆபத்தானது. இயந்திரத்தை ஒருபோதும் மனிதனாக சிந்திக்க முடியவில்லை.
அவர் எனது சமஸ்கிருத ஆசிரியர், அவர் நன்றாக கதை கூறுபவர். அதனால் அவர் எனக்கு சிறந்த ஆசிரியராக தெரிந்தார்” என்றார்.
மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் என்ற வள்ளலார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் ஆளுநர் ரவி.
அத்துடன், “கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் மன அழுத்தத்துடன் குழந்தைகளும் கல்வி கற்றுக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தையை, நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள். ஆனால், அது குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுகிறது. படிப்பில் ஒழுக்கத்தில் மாணவன் கவனக்குறைவாக இருக்கும் போது, ஆசிரியர் மாணவர்களை கண்டிப்பதில் தவறில்லை. ஆசிரியர்கள் தான் இன்று நாட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலத்தில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.
ஆசிரியர்களின் பங்களிப்பு பாரதத்திற்கு மிக முக்கியமானது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வளர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த பாரத், அருமையான கட்டமைப்பால் வலுவடைந்துள்ளது. குருக்குலத்தில் பாரத் நன்றாக வளர்ந்து வந்தது. தேசிய கல்விக் கொள்கை நாட்டின் மிகச்சிறந்த மாற்றத்தை கொண்டு வரும்” என தெரிவித்தார்.