"இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன்!"- ஆளுநர் ரவி

"இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன்!"- ஆளுநர் ரவி
"இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன்!"- ஆளுநர் ரவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “தியாகராஜர் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி உள்ளார். அவர் ஸ்ரீராமனை நினைத்து அவருக்காக பாடல்கள் பாடியுள்ளார். இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஸ்ரீராமன். பாரதத்தின் எந்த திசைக்கு சென்றாலும் அங்கு ராமரின் பக்தர்கள் இருப்பார்கள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கும் மக்கள் ராமரால் ஒன்றிணைவார்கள். ரிஷி, புனிதர்கள், கவிஞர்கள் உள்ளிட்டவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் நம் பாரதம். இந்தியா எந்த ஆட்சியாளர்களாலும், பலமிக்கவர்களாலும் உருவாக்கப்படவில்லை. ஒரு கடவுள் இந்த உலகை உருவாக்கி உள்ளார். மனிதர்கள், விலங்குகள், கோள்கள் என அனைத்தையும் பிரம்மன் படைத்துள்ளார்.

சனாதனம் என்பது அனைவரையும் உள்ளடக்க கூடியது. யாரையும் பிரித்து பார்க்க கூடியது அல்ல. சனாதன கலாச்சாரத்தின் அலை தெற்கிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து தான் நாடு முழுவதும் பரவியது. இது அனைவரையும் ஒரே குடும்பமாக்கியது. சனாதன தர்மம் இந்த பாரதத்தை உருவாக்கியது. நம் நாடு முழுவதும் ஸ்ரீராமனை விரும்புகிறார்கள்.

இசை என்பது பக்திக்கான வலிமையான ஊடகம். தியாகராஜர் கீர்த்தனை பாடும் இந்த இடம், நம் நாட்டின் பக்திக்கு தகுதியான இடங்களில் ஒன்று. இந்தியாவை உலக நாடுகள் உற்று பார்க்கிறது. இங்கு அறிவியல், தொழில்நுட்பம், ஆன்மிகம், இசை அனைத்தும் சிறந்து விளங்குகிறது.

18 ஆம் நூற்றாண்டு வரை பாரதம் உலகின் பொருளாதார சக்தியாக விளங்கியது. காலனியாதிக்கத்தால் அது பின் தங்கியது தற்போது மீண்டும் அதை நாம் மீட்டுருவாக்கம் செய்து வருகிறோம். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் நாடாகவும் உலகின் தலைமையாகவும் விளங்கும்.

பாரதம் ஜி20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்கும் நிலைக்கு வந்துள்ளது. நம் நோக்கம் ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பது தான். உலகம் இன்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கால நிலை மாற்றம், போர்,  தீவிரவாதம்,  உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகம் இருக்கும் நிலையில் அவற்றிலிருந்து மக்களை காக்க உலகத்திற்கு பாரதம் ஒளியாக இருக்கிறது.

உலகை காப்பது நம் கடமை. நாம் பொருளாதாரம், ராணுவம், ஆன்மிகள் ஆகியவற்றில் வலிமைமிக்கவர்களாக இருக்கிறோம். நாம் உலகத்தில் உள்ள அனைவரையும் நேசிக்க வேண்டும். நாம் அனைவரும் உலக தாயின் குழந்தைகள். நம் தாயை காப்பதிலும், தாயின் குழந்தைகளை காப்பதும் நம் கடமை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com