“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்
கடந்த ஒரு வருடத்தில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த ஒரு வருடத்தில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகை வந்ததே இல்லை. ஆளுநரையோ அல்லது செயலாளரையோ அல்லது ஆளுநர் மாளிகையின் மற்ற அதிகாரிகளையோ அவர் சந்தித்ததே இல்லை. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான பிரச்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்த கட்டுரைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதுவும் அனைத்து புலன் விசாரணைக்குப் பிறகு கட்டுரை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தலைமையில் நடத்தப்பட்ட அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் சென்றபோது, அவர் எந்த விருந்தினர் மாளிகையிலும் தங்கவில்லை. அவர் ஒரு நிமிடம் கூட எந்த விடுதியிலும் தங்கவில்லை. ஆளுநருடன் அவரது செயலாளர் மதுரை காமராஜன் பல்கலைக்கழகத்திற்கு எப்போதும் சென்றதில்லை. ஆளுநரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் தான் நக்கீரன் கட்டுரை வெளியிட்டது. தமிழகம் சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரனார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் போன்ற தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களின் பெருமை பெற்ற மாநிலம். இதுவரை மாநில அரசின் உரிமையில் ராஜ்பவன் தலையிட்டதில்லை. ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வரும்போது அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளது.