பயணத்தின் போது விபத்து ஏற்படவில்லை: ஆளுநர் மாளிகை
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்புக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது என வெளியான தகவலை ஆளுநர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக அளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு ஆளுநர் மாளிகையை மாலை 4:20 மணிக்கு வந்தடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பயணத்தின் போது எந்த விபத்தும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆளுநரின் கான்வாய்க்கு முன்னால் சென்ற பொலிரோ வாகனம், கான்வாயிலிருந்து விலகி காஞ்சிபுரத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது.
அப்போது தான் விபத்துக்குள்ளானதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் ஆளுநரின் கான்வாயில் ஒரு அங்கமாக இருக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநரின் பயணத்தின் போது எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது தெளிவாவதாக ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.