
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு “கொளத்தூர் - வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் LC 1 மேம்பாலமானது, சென்னை மாநகராட்சியும் ரயில்வே துறையும் இணைந்து அமைக்கப்பட்டு உள்ளது. 71 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வந்துள்ளார். வரும் 13 ஆம் தேதி இந்த பாலம் திறக்கப்பட உள்ளது. ‘ஸ்டீபன்சன் பாலத்தை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்’ என முதல்வர் சொன்னது மட்டுமில்லாமல், மூன்று முறை அதை ஆய்வும் செய்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
அண்ணாமலை கர்நாடக வெயிலில் காய்ந்துகொண்டு உள்ளார். ஏதோ சொல்ல வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். என்னிடமுள்ள புதிய கார், என்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாங்கியதாக சொன்னார். தற்போது மாற்றி பேசி வருகிறார். உண்மையில் அதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை. கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமே கார் வாங்கப்பட்டு உள்ளது.
ரேவர் கருவி மூலம் கோயில் நிலம் அளவீடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 1,11,000 ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக அரசை ஆளுநர் பாராட்ட வேண்டும். இன்னும் சொல்ல போனால் இந்து சமய அறநிலையத்துறை இடங்களை கைப்பற்றப்பட்டதில் ஆக்கிரமிப்பு செய்தவர்களில் 6 பேர் பாஜக நிர்வாகிகள்.
ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை.
சட்ட மீறல் விதிமிறல் விஷயங்களில் சிதம்பரம் தீக்ஷீதர்கள் என்றால், அவர்கள் மீது அந்த சட்டம் பாயக்கூடாதா? சிதம்பரம் தீக்ஷீதர்கள் என தனி சட்டம் வகுத்து தந்துளார்களா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே விதிமீறல் எங்கு நடைப்பெற்றாலும் அங்கு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் காட்டமாக பேசிய சேகர் பாபு "ஆளுநர் என்பவர் என்ன ஆண்டவரா? எங்களை பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்கு தேவை இல்லை.
இதே ஆளுநர் நம் முதல்வரை பாராட்டி உள்ளார். இருப்பினும் ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இது போன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதனை முதல்வர் எதிர்கொள்வார்.
திராவிட மாடலை கர்நாடக தேர்தலில் பாஜக பயன்படுத்தி வருகிறது. காலாவதி ஆகப்போவது ஆளுநர் பதவியும் அவர் முன்னிறுத்தும் இயக்கமும் மட்டுமே. திராவிட மாடல் அரசு நாட்டிற்கு எடுத்துக்காட்டான அரசு" என்றார்.