துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் உடன் சென்றனர். ஏற்கனவே அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டமிட்டுள்ளார். மேலும் காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நாளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.