கோவையில் ஆளுநர் ஆய்வு: ஆட்சியில் தலையிடுவதாக சர்ச்சை
கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் பதவியில் இருந்து விடை பெற்ற பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பதவியேற்றார். இதற்குமுன் இவர் அசாம் மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றியவர்.
இவர் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், முதன்முறையாக பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது. புதுச்சேரி, டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆளுநர்கள் ஆட்சியில் தலையிடத் தொடங்கிவிட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.