எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் முறையாக சட்டமன்றத்தில் பேசினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.தமிழில் வணக்கம் கூறி தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கருத்துகளைக் கூற வாய்ப்பு தரப்படுமெனக்கூறி எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையை புறக்கணித்தனர்.
பின்னர் தொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சிறப்பாக அமல்படுத்திய தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தார். வருவாய் குறைந்தபோதும் தமிழக அரசு சிறப்பாக மக்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசோடு தமிழக அரசு இணைந்து சிறப்பாக செயல்பட்டதாகக்கூறிய ஆளுநர், கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், கடைசி மீனவரை மீட்கும் வரை மத்திய அரசின் மீட்புப்பணி தொடருமென்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார். அதேபோல, பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்டிபிடி உரிமையை பாதுகாக்க மாநில அரசு தொடர்ந்து பாடுபடுமென்றும் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார். அதோடு, மக்கள் நலனுக்காக ஜெயலலிதா முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை என்றும் புகழாரம் சூட்டினார். மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் தற்போது மின்மிகை மாநிலமாக இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அவரது வேதா நிலையத்தை நினைவிடமாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார். நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் தமிழக உரிமையை சட்டரீதியாக நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக உள்ளது எனக்குறிப்பிட்ட அவர், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என்றும் கோரினார்.