உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அரசு வேலை: ஸ்டாலின் கோரிக்கை
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் பணி வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் இழப்பு காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் சோகத்தில் ஆழந்துள்ள ஆய்வாளர் மனைவி மற்றும் மகன்களை ஆவடியிலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளை பிடிக்க வெளியூர் செல்லும் காவல்துறையினரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.