கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் தாமதம் : நிதி வழங்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படாததால் அகழ்வாராய்ச்சி பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-ம் ஆண்டு கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. நான்கு கட்டமாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி ஆய்வுப் பணியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்வேறு அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அகழ்வாராய்ச்சியின்போது தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தங்க ஆவரணங்கள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், மனிதஉடல் சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், சுடுமண் காதணி, இரும்பாலான போர்க் கருவிகள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆச்சரியமளிக்கும் தொன்மையான நாகரீகங்கள் குறித்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் கீழடி தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. இதனால் 5-ஆம் கட்ட ஆய்வுப் பணிகளில் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அடுத்தபடியாக 5-ஆம் கட்ட ஆராய்ச்சிக்கும் மத்திய அரசு அனுமதியளித்தது.
இந்நிலையில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 5-ஆம் கட்ட ஆராய்ச்சி பணிக்கான 45லட்சம் ரூபாய் நிதியை மாநில அரசிடம் கோரியுள்ளதாகவும், அது பிப்ரவரி மாத இறுதிக்குள் ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.ஆனால் அதற்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை.இதனால் 5ம் கட்ட அகழவாராய்ச்சி பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கீழடி 5ம் கட்ட ஆராய்ச்சி பணிகளுக்கான நிதியை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கீழடி அகழ்வாராய்ச்சி இயக்குனர் சிவானந்தத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது நிதி கிடைத்தவுடன் பணிகள் துவங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

