“லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு ஏன் தனியாருக்கு விற்கிறது ” - சு.வெங்கடேசன்

“லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு ஏன் தனியாருக்கு விற்கிறது ” - சு.வெங்கடேசன்
“லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு ஏன் தனியாருக்கு விற்கிறது ” - சு.வெங்கடேசன்

171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. ஆனாலும் அதனை தனியாருக்கு அரசு ஏன் விற்கிறது  என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத் துறை நிறுவனங்களின் லாபகரமான செயல்பாடு, பங்கு விற்பனை பற்றிய கேள்விகளை சு. வெங்கடேசன் மக்களவையில் எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர், "171 பொதுத் துறை நிறுவனங்கள் 2019 - 20 நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளன. அவற்றில் 10 மகா ரத்னாக்கள், 14 நவரத்னாக்கள், 73 மினி ரத்னாக்கள் உள்ளன.

அவற்றில் மகா ரத்னாவாக உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், மினி ரத்னாக்களாக உள்ள ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, மினி ரத்னா நிறுவனங்களான பாரத் எர்த் மூவர் லிமிடெட், பவான் ஹான்ஸ் லிமிடெட் ஆகியன கேந்திர விற்பனை வாயிலாக தனியாருக்கு விற்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் "அமைச்சரின் பதில்கள் பொதுத் துறை நிறுவனங்களின் நல்ல செயல்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. தனியார் மயம், பங்கு விற்பனைக்கான நியாயங்களாக எப்போதுமே அரசாங்கம் கூறுவது என்ன? நஷ்டத்தில் இயங்குகிறது என்பதே. மக்கள் வரிப் பணத்தை குழியில் போட முடியுமா போன்ற வழக்கமான வசனங்கள் வேறு.

ஆனால், அமைச்சர் பதிலில் 171 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்பது மட்டுமின்றி 97 நிறுவனங்கள் ரத்னாக்களாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினிரத்னா என்றால் மூன்று ஆண்டு தொடர் லாபம், நவரத்னா எனில் மூன்று ஆண்டு லாபத்தோடு இன்னும் ஏழெட்டு அளவு கோல்களில் சிறப்பான செயல்பாடு, மகாரத்னா என்றால் ரூ 5000 கோடிகளுக்கு மேல் லாபம் என்று பொருள்.

இந்த ரத்னாக்களும் தனியாருக்கு விற்கப்படும் என்றால் இவர்கள் சொல்லி வந்த நஷ்ட  கதையாடல் என்ன ஆனது? ஆட்சியாளர் சொல்வது போல குழிகளில் பணம் போடப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களே தங்கக் குழிகளாக உள்ளன என்பதே உண்மை என்பது இப்பதிலில் தெளிவாகிறது. எதற்காக தனியார் மயம்?'”என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com