கேரளா: ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்; உணவகத்துக்கு சீல்

கேரளா: ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்; உணவகத்துக்கு சீல்
கேரளா: ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்; உணவகத்துக்கு சீல்

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்திருக்கிறார். மேலும் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்துசெல்லும் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் இங்கு ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியதாகவும், அதனாலேயே அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றுமொரு மாணவியான தேவநந்தா என்ற பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முதற்கட்ட தகவல்களின்படி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள்தாம். அவர்களில் சிறு வயதுடையவர்கள் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனைக்குக் அனுமதிக்கப்பட்டனர். இறந்த மாணவி செருவத்தூரில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவி, கடந்த 5 மாதங்களுக்கு முன் தந்தையை இழந்த இச்சிறுமி, தனது பெரியம்மா வீட்டில் தங்கி 12ஆம் வகுப்பு படிக்க திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால் தற்போது ஆசை ஆசையாய் சாப்பிட்ட உணவே நஞ்சாகி உயிரைப் பறித்துள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்த கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதற்கு சீல் வைத்தனர். ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மசாலா கலந்தபின்னர் அதனை ரொட்டியால் சுற்றி ஷவர்மா என்ற பெயரில் விற்கப்படும் இந்த உணவை, சிறார்களும் இளைஞர்களும் விரும்பி உண்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. எந்த உணவாக இருந்தாலும் அதன் தரமே பிரதானம் என்ற நிலை மாறி, வணிகநோக்கத்துடன் சில உணவகங்கள் செயல்படுவதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது

சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். மேற்கட்ட விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு பிரப்பித்துள்ளார். மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com