கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். எனவே லேசான அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7,500 வரை வசூலிக்கலாம்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளவர்களிடம் நாளொன்றுக்கு 15 ஆயிரம் வரை வசூலிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகபட்ச கட்டணங்களாகும். எனவே இதற்கு மேல் நோயாளிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. இந்த பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.