பெரம்பலூர்: மதிய உணவு வழங்கப்படாததால் பசியுடன் வீடு திரும்பிய பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர்: மதிய உணவு வழங்கப்படாததால் பசியுடன் வீடு திரும்பிய பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர்: மதிய உணவு வழங்கப்படாததால் பசியுடன் வீடு திரும்பிய பள்ளி மாணவர்கள்
பெரம்பலூர் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் உற்சாகமாக நடைபெற்ற நிலையில் பெரம்பலூர் அருகே மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. புகாருக்குள்ளான பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் நரிக்குறவர் மற்றும் கலைக் கூத்தாடி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த பள்ளியில் தற்போது 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி தொடங்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆர்.எஸ்.டி.சி என்ற தன்னார்வ அமைப்பே உணவு வழங்கி வந்த நிலையில் தற்போது அவர்களும் விலகிவிட்டதால் மலையப்ப நகர் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் மதிய உணவு இல்லாமல் பசியுடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியை அகிலா, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆலத்துர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளின் பட்டியலில் மலையப்ப நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடம்பெற வில்லை என நரிக்குறவ சமுதாய மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜர் நந்தகுமாரிடம் கேட்டபோது, புகாருக்குள்ளான பள்ளியில் இருந்து சத்துணவு தேவை தொடர்பான புரோஃபசல் தங்களுக்கு வரவில்லை என்றும் அதனால் தாங்கள் பராமரிக்கும் பள்ளிகளின் பட்டியலில் 97 பள்ளிகள் இருந்தும் மலையப்ப நகர் பள்ளி இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பள்ளியிடம் இருந்து புரோஃபசல் வந்தால் அதிகாரிகளிடம் தெரிவித்து மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com