நேற்று வரை கொத்தடிமைகள்.. இன்று முதல் செங்கல்சூளை முதலாளிகள்.. அரசின் முன்னுதாரண சம்பவம்!

நேற்று வரை கொத்தடிமைகள்.. இன்று முதல் செங்கல்சூளை முதலாளிகள்.. அரசின் முன்னுதாரண சம்பவம்!
நேற்று வரை கொத்தடிமைகள்.. இன்று முதல் செங்கல்சூளை முதலாளிகள்.. அரசின் முன்னுதாரண சம்பவம்!

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க திருத்தணி அருகே 30 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேருக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு சார்பில் செங்கல் சூளை அமைத்துக் கொடுக்கப்பட்ட சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படுபவர்கள் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் பல குடும்பங்கள் மீண்டும் செங்கல் சூளைகளுக்கே கொத்தடிமைகளாக செல்லக்கூடிய நிலை உருவானது. இதனால் தமிழக அரசின் சீரிய முயற்சியால் தமிழகத்திலேயே‌ முதல்முறையாக‌ திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 30 குடும்பங்களை சேர்ந்த 300 பேரைக் கொண்டு சூளைப் பணிகளை மேற்கொண்டு, அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செங்கல் சூளை பணிகளை தொடங்கிவைத்தார். செங்கல் சூளைக்கு தேவையான மண் உட்பட அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட அவர்களுக்கு செங்கல் சூளை அமைத்து வாராவாரம் அவர்களுக்கான கூலியையும் வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைப் பணிகள் முடிந்ததும் செங்கற்களை விற்று அதில் வரும் வருமானத்தைக்கொண்டு அடுத்த கட்ட மூலப் பொருட்களை வாங்கிக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கடந்த காலங்களில் கொத்தடிமைகளாக இருந்த மீட்கப்பட்டவர்கள் மீண்டும் கொத்தடிமைகளாகவே வாழ்ந்துவந்த நிலையில், தற்போது தமிழக அரசின் சீரிய முயற்சியால் கொத்தடிமை என்ற கொடுமையை அனுபவித்து வந்தவர்கள் வருங்காலத்தில் மற்றவர்களைபோல வாழ வழிவகுத்திருப்பது அந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com