காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் நீர் பங்கீடுக்கான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அலட்சியம் செய்துவிட்டதாக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசின் காலதாமதத்தால் தமிழகத்தில் டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.