2022-ல் 22 நாள்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
வருகிற 2022 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 22 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விடுமுறை நாட்கள் உள்ளன.
தொடர்புடைய செய்தி: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை - தமிழக அரசு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி ஆகியவற்றுக்கான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தையொட்டி, ஜனவரி 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 22 நாட்களில், உழவர் திருநாள், மே தினம், பக்ரீத், காந்தி ஜெயந்தி, மிலாது நபி, கிறிஸ்துமஸ் ஆகிய 6 விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. அதேநேரத்தில் பொங்கல், புனித வெள்ளி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளிக்கிழமைகளிலும், சுதந்திர தினம், தீபாவளி ஆகியவை திங்கள்கிழமைகளிலும் வருகின்றன.
ஆங்கிலப் புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், தெலுங்கு வருட பிறப்பு ஆகியவை சனிக்கிழமைகளில் வருகின்றன. ரம்ஜான், மொகரம், ஆயுத பூஜை ஆகியவை செவ்வாயன்றும், குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி ஆகியவை புதனன்றும் வருகின்றன. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 6 விடுமுறை நாட்கள் வருகின்றன. அதில் ஜனவரி 14 - பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமையிலும்; ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம் சனிக்கிழமையிலும்; ஜனவரி 16 - உழவர் திருநாள் ஞாயிற்றுக்கிழமையிலும் வருவகிறது. அதைத்தொடர்ந்து, செவ்வாய் கிழமை உழவர் திருநாள் ஜனவரி 18-ல் வருகிறது. இடையே ஜனவரி 17-ம் தேதி ஒருநாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.