உடலை மாற்றி ஒப்படைத்த அரசு மருத்துவமனை - அடக்கம் செய்யப்பட்ட உடலை கேட்டு உறவினர் கோரிக்கை
கடலூர் மருத்துவமனையின் தவறால், மாற்றி அடக்கம் செய்யப்ப்பட்ட ஒருவரின் உடலை தோண்டி எடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் என்பவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். அதே போல அந்த மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை மருத்துவமனைக்கு வந்த ஜாகிர் உசேன் உறவினர்கள், பேக் செய்யப்பட்ட உடலை உசேனின் உடல் என்று நினைத்து, அந்த உடலை புவனகிரி அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தனர். இதனையடுத்து ஆறுமுகத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கச் சென்றுள்ளனர். உடலைப் பார்த்த போது அது ஆறுமுகம் இல்லை என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் மருத்துவமனையினர் ஆறுமுகத்திற்கு பதிலாக ஜாகிர் உசேனின் உடலை அங்கு வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து ஜாகிர் உசேனின் உடலை பெருமாத்தூர் கொண்டுசென்று சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைத்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மாற்றி அடக்கம் செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனை இணை இயக்குநர் ரமேஷ் கூறும் போது, “ உடல் மாற்றிக்கொடுக்கப்பட்டது தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.