"தரம் உயர்த்தப்பட்டு 15 வருஷமாச்சு... இன்னும் கழிவறை வசதிகூட வரலை"- அரசு பள்ளியின் அவலநிலை

"தரம் உயர்த்தப்பட்டு 15 வருஷமாச்சு... இன்னும் கழிவறை வசதிகூட வரலை"- அரசு பள்ளியின் அவலநிலை
"தரம் உயர்த்தப்பட்டு 15 வருஷமாச்சு... இன்னும் கழிவறை வசதிகூட வரலை"- அரசு பள்ளியின் அவலநிலை

காஞ்சிபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டபோதும், போதிய வசதிகள் செய்யப்படாமல் ஒரு அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காரை ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 2008-ம் ஆண்டேவும் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வரை அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடும் சிரமத்துக்கு மாணவ மாணவியர் உள்ளாகியிருக்கின்றனர்.

தற்போது 180-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் ஒரு இடத்திலும், மற்ற இரண்டு வகுப்பறைகள் இரண்டு தெருக்கள் தள்ளியும் இருக்கிறது. மட்டுமன்றி பெஞ்ச் வசதி இலலததால், ஒருசில மாணவ மாணவிகள் பெஞ்சில் அமர்ந்தும் ஒருசில மாணவர்கள் தரையில் அமர்ந்தும் பாடம் பயின்று வருகின்றனர்.

180-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் இரண்டே இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு கழிவறைகளும் வேறொரு இடத்தில் உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் துணையுடனே கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு நேரம் இல்லாத பட்சத்தில், கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியில், காரை மட்டுமின்றி சிறுவாக்கம், குத்தரம்பாக்கம் போன்ற நான்குக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். ஒருசில பெற்றோர்கள் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், தங்கள் பிள்ளைகளை வேறொரு அரசுப் பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்த்து விடுகின்றனர்.

காரை ஊராட்சியில் போதுமான இடவசதி இருந்தும் தற்போது வரை இப்பள்ளி இப்படி செயல்படுவது, தங்களுக்கும் வேதனையளிப்பதாக மாணவ மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வியை தொடர்பு கொண்டு புதியதலைமுறை சார்பில் நாம் கேட்டபோது, “கூடிய விரைவில் இப்பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படுத்தப்படும். அங்கு மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com