அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிட அனுமதி | விதியில் திருத்தம் செய்த தமிழக அரசு!
அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர், எழுத்தாளர்களாகவும் உலா வருகின்றனர். எனினும், அவர்கள் புத்தகங்கள் வெளியிடுவதற்கு என சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்து ஆணை வெளியிட்டுள்ளது. அது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-இன்கீழ் ஓர் அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது.
அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை.
ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம். அந்தப் புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே, அனுமதி பெறவேண்டும். அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கைப் பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்தப் புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்தச் சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எழுத்தாளர்களாக இருக்கும் அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.