நோயாளிகளை தொட்டுக்கூட பார்ப்பதில்லை: அரசு மருத்துவரின் அலட்சிய சிகிச்சை
உயிரைக்காக்கும் மகத்தான சேவை மருத்துவர்களுடையது. ஆனால் அந்த சேவை எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், நோயாளிகளை உதாசீனப்படுத்தி பேசும் ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவரின் செயல் எல்லோர் மத்தியிலும் அதிருப்தியையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நாகமலை அடுத்த ஒட்டனூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகனை நாய் கடித்ததால், சிகிச்சைக்காக ஏரியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், அவனை தொட்டுக்கூட பார்க்காத மருத்துவர் முனுசாமி, மாத்திரைகளை மட்டும் எழுதிக்கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு அலட்சியமாக பதில் சொல்லிய மருத்துவர், வேண்டுமென்றால் புகார் தெரிவித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும், வேண்டுமென்றால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று மருத்துவர் கூறியதாக சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் அனைவரிடமும் இதே தொனியில் மருத்துவர் முனுசாமி பேசுவதாகவும், பரிசோதிக்காமல் மருத்துவம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏழை எளிய மக்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மருத்துவர் நடந்து கொள்வதாகவும் பொதுக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.