டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்
மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவ்வப்போது மதுரை பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே நேற்று திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். உடனே அங்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில் டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர் பிருந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இன்று காலை மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தியாஷினி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருந்தார். அதனால், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.