பெரம்பலூரில் பாதுகாப்பின்றி சாலையில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசுக் கல்லூரி மாணவர்கள்!
பெரம்பலூர் அருகே அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பின்றி பிரதான சாலை ஓரம் அமர்ந்து தேர்வு எழுதும் அவலம் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் சுமார் 3-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செமஸ்டர் தேர்வு தொடங்கியுள்ளது. இன்று ஆங்கிலத் தேர்வு நடைப்பெற்றது.கொரோனா விதிகள் அமலில் இருப்பதால் மாணவர்கள் கல்லூரிக்குள் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. வீட்டியிலிருந்து தேர்வு எழுத கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், விடைத்தாள்களை பிற்பகல் 1-மணி முதல் 3-மணிக்குள் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் வீட்டிருந்து தேர்வு எழுதாமல் மாணவர்கள் கல்லூரி எதிரே பாதுகாப்பற்ற முறையில், சாலை ஓரங்களில் அமர்ந்து தேர்வு எழுதினர். பெரம்பலூர் - துறையூர் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் சூழ்நிலையில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் அதன் அருகிலையே உட்கார்ந்து தேர்வு எழுதியது பார்ப்பவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியது.
தொலைதூரத்திலிருந்து வரும் மாணவிகள் இது தங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பக்கோரி இருந்தால் தாங்கள் இவ்வாறு ஆபத்தான முறையில் தேர்வு எழுத வேண்டிய சூழல் வந்திருக்காது என்று தெரிவித்தனர்.
பாதுகாப்பற்ற முறையில் சாலையின் அருகில் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதுவது குறித்து கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சிவனேசனிடம் கேட்டபோது, ”நாளையிலிருந்து மாணவர்கள் சாலையோரத்தில் தேர்வு எழுதாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.