கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் - திமுக
அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக அரசு மாற்றி வருகிறது. இந்நிலையில் 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் இருக்கும் 'கலைஞர் அரங்கத்தை' கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக கலைஞர் அரங்கத்தை அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுகவின் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மற்றும்
பி.கே.சேகர்பாபு ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் நேரில் அளித்தனர்.