நெல்லை - நிற்காமல் சென்ற அரசு பேருந்து; பயணிகள் புகார்.. ஓட்டுநர், நடத்துனருக்கு நீதிமன்றம் அபராதம்!

திருநெல்வேலியில் கிராம பேருந்து நிலையமொன்றில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் வழக்கு தொடர்ந்த நிலையில் உத்தரவு!
பயணிகள்
பயணிகள்PT

செய்தியாளர் - மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மஞ்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் (குழந்தைகள் உட்பட), வள்ளியூர் அருகே உள்ள சாமியார் பொத்தை (எ) சூட்டு பொத்தை என்ற ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். பின் இரவு சுமார் 9:30 மணிக்கு சொந்த ஊரான மஞ்சங்குளத்திற்கு அவர்கள் திரும்பி உள்ளனர்.

திருவிழா காலம் என்பதால் பேருந்தில் அதிகமான கூட்டம் இருந்துள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகப் பணியாளரும் காவல்துறையினரும் சேர்ந்து மஞ்சங்குளத்திற்கு TN 74 N 1971 என்ற அரசு பேருந்தை இயக்கி அதில் 25 பேரையும் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்கள்.

கட்டணமாக நபர் 1 க்கு ரூபாய் 11-ஐ நடத்துனர் வசூல் செய்துள்ளார். ஆனால் பேருந்தை மஞ்சங்குளத்தில் நிறுத்தாமல், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரும்பத்து என்ற ஊரில் நிறுத்தி இருக்கிறார் ஓட்டுனர். இதில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் நுகர்வோர்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரும் பெரும்பத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் மஞ்சங்குளத்திற்கு இரவு 10 மணிக்கு மேல் குழந்தைகளுடன் நடந்து சென்றுள்ளனர். இதனால் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் மேல் வழக்குதொடர முடிவுசெய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பயணிகள் 13 பேர், வழக்கறிஞர் பிரம்மா மூலம் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்
திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்

வழக்கின் மீதான மனுவை விசாரணை செய்த திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் கிளடஸ் ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தலா ரூபாய் 5000 + வழக்குச் செலவு ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 6000 (வழக்கு தொடர்ந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 6,000) தர உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு தொடர்ந்த நுகர்வோர்களான 13 பயணிகளுக்கும் சேர்த்து ரூபாய் 78,000-ஐ அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், நடத்துனர் மற்றும் ஒட்டுனர் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துத்துள்ளது நுகர்வோர் ஆணையம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com