திடீரென உடைந்த பேருந்து படிக்கட்டுகள்.. நல்வாய்ப்பாக தப்பித்த மாணவர்கள்
ஆவடி முதல் புதிய கண்ணியம்மன் நகர் வரை, 61-கே என்ற பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்தை ஓட்டுநர் சுந்தரமூர்த்தி இயக்க, பேருந்து வழக்கம்போல கண்ணியம்மன் நகர் பகுதியிலிருந்து ஆவடி நோக்கி 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் இருந்ததால் சிலர் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தனர்.
அப்போது பாரம் தாங்காமல் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததில், அதில் நின்றிருந்த இரு பள்ளி மாணவர்களும்,ஒரு இளைஞரும் கீழே விழுந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட தகவலில் பேருந்தின் படிக்கட்டுகள் சேதமடைந்திருப்பது குறித்து ஏற்கெனவே பணிமனையில் கூறியிருந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

