தமிழகத்தில் புதிய அமைச்சர்களுக்காக தயாராகும் அரசு பங்களா வீடுகள்
புதிய அமைச்சர்கள் குடியேறுவதற்காக அரசு வீடுகளில் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும், அவருடன் 33 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகவும் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றனர். அமைச்சர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அரசு குடியிருப்பிலுள்ள 26 வீடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்த அதிமுக அமைச்சர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை காலி செய்ய, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மட்டும் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யவில்லை. அவர்கள் இருவருக்கும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கான வீடுகளை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.