மலைக்க வைக்கும் மருத்துவச் செலவுகள்.. வறுமையில் சிக்கும் குடும்பங்கள்.. அரசு செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில், பல குடும்பங்களின் பொருளாதாரமே தலைகீழாக மாறும் அளவுக்கு மருத்துவச் செலவுகளின் வீச்சு உள்ளது. குறிப்பாக, மருத்துவத்துறை பணவீக்கம் சுமார் 13% ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பணவீக்கத்தை விட அதிகம். பலர் சொத்துகளை விற்றும் நகைகளை விற்றும் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் மருத்துவச்செலவுகளை சமாளிக்கவேண்டியுள்ளது. மருத்துவச்செலவுகளை சமாளிக்க மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு திட்டங்கள் ஆபத்பாந்தவனாக இருந்தாலும் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களால் அனைவருக்கும் அரசின் காப்பீட்டு பலன் கிடைப்பதில் தடங்கல்கள் உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், இத்தடைகள் களையப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
தொடர்ந்து, இந்தியாவில் புதிதாக உருவாகும் மருத்துவர்கள் அளவுக்கு படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை என்கிறார் இந்திய மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர் அபுல் ஹசன். மருத்துவ பரிசோதனைச் செலவுகளை கட்டுப்படுத்த எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு ஊக்குவிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.
மேலும், மருந்துகள் மூலப்பொருள் உற்பத்திக்கு பெரும் ஊக்கம் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவத் துறைக்காக மத்திய அரசின் ஒதுக்கீடு கடந்தாண்டு, 96 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் வெறும் 1.94% மட்டுமே. இதை 5% ஆக அதிகரிக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கடுமையான மருத்துவச் செலவுகளால் ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 4 கோடி இந்திய குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்குவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், மருத்துவச்செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகுமா என எதிர்பார்க்கின்றனர் சாமானியர்கள்

