நல்ல லாபம் தரும் கடற்பாசி: புதிய தொழிலுக்குத் திரும்பும் மீனவர்கள்

நல்ல லாபம் தரும் கடற்பாசி: புதிய தொழிலுக்குத் திரும்பும் மீனவர்கள்
நல்ல லாபம் தரும் கடற்பாசி: புதிய தொழிலுக்குத் திரும்பும் மீனவர்கள்

மீன்வளம் அண்மை காலமாக குறைந்து வருவதால் மீனவர்கள் மாற்றுத் தொழில்களை நோக்கி பயணித்து வரும் சூழலில் உள்ளனர். அவ்வாறு மீனவர்களுக்கான சிறந்த கடல்சார் மாற்று தொழிலாக கடல்பாசி வளர்ப்பு கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. தமிழக அரசும் கடற்பாசி வளர்ப்பினை ஊக்கப்படுத்தி வருகிறது.  

கடற்பாசி என்னும் கப்பாகைகஸ் ஆல்வரேசி என்ற பாசி சாக்லேட், ஐஸ்க்ரீம், ஜிகர்தண்டா மற்றும் மருத்து பொருட்களுக்கு பயன்பட்டு வருவதால் உலகளவில் இதற்கு தேவை அதிகமாகி உள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடற்பாசி மீனவர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி புதிய கடற்கரை துறைமுக பகுதிக்கு உட்பட்ட சுனாமி காலனி மீனவர்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுப்பட்டு உள்ளனர். கடற்பாசி வளர்ப்பு மூங்கில் கூடைகள் மூலம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இப்பகுதி மீனவர்களோ பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு கடற்பாசி தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடற்கரை பகுதியில் காற்று வாங்க வரும் பொதுமக்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை நீண்ட கயிற்றில் வரிசையாக கட்டுகின்றனர். அந்த பாட்டில்களுக்கு இடையே கடற்பாசி துண்டுகளை கட்டி விடுகின்றனர். அதனை தொடர்ந்து கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று கடலில் மிதக்க விடுகின்றனர். இதனை சுமார் 30முதல் 45 தினங்கள் கழித்து அறுவடை செய்கின்றனர். இதில் ஒருகிலோ கடற்பாசியை கயிற்றில் கட்டி கடலில் போடும்போது அறுவடை காலங்களில் சுமார் 6 முதல் 10 கிலோ அளவிற்கு வளர்ந்து விடுவதால் இந்த மாற்றுத்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு இது ஏற்றதாக உள்ளது என்கின்றனர்.

அறுவடை செய்த கடல்பாசியை கடற்பகுதியில் உலரவைத்து அதிலுள்ள மண்ணை அகற்றி விற்பனை செய்கின்றனர். இதனை பல்வேறு மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் கடற்கரைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். சில நிறுவனங்கள் கடற்பாசியை மீனவர்களுக்கு வழங்கி அறுவடைக்குப் பின்னர்  அதனை வாங்கி செல்கின்றனர். கடல்பாசி கிலோ ரூ 40 முதல் ரூ 50 வரை விற்பதாக கூறும் மீனவர்கள் ஒருகிலோ பாசியை வளர்த்தால் 10 கிலோ முதல் அறுவடை கிடைக்கும் என்கின்றனர்.

கடற்பாசியை வளர்க்க சரியான காலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டம்தான் எனக்கூறும் மீனவர்கள் அருகிலுள்ள தனியார் உரத்தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பதால் கடற்பாசி அழியும் சூழலும் உள்ளது, இதனால் வருவாய் இழப்பு மட்டுமல்லாது முதலுக்கும் மோசமான நிலை ஏற்பட்டு வருகிறது என்கின்றனர் மீனவர்கள். தமிழக அரசு கடற்பாசி வளர்ப்பினை ஊக்கப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தினால் இத்தொழிலில் அதிகளவு மீனவர்கள் ஈடுபடும் சூழல் உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து கடல் ஆராய்ச்சி ரசாயண நிறுவனத்தில் டெக்னீசியன் திருப்பதி கூறும்போது, கடல்பாசி வளர்ப்பு வணிக ரீதியில் மீனவர்களுக்கு அதிகளவு பயனளிக்கும் என்ற அவர், மத்திய மீன்கழகம் மீனவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவும் இதன் மூலம் மீனவர்களுக்கு அதிகளவு பயனளிக்கும் என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com