ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? இன்றைய காலகட்டத்தில் ஒரு ரூபாய்க்கு பெரிதாக எதுவும் பெரிதாக கிடைத்துவிடப்போதில்லை. ஆனால், ஒரு ரூபாய் பீஸ் வாங்கிக்கொண்டு நான்காயிரம் மாணவ, மாணவியருக்கு கல்வி கற்றுத்தந்திருக்கிறார் ஒருவர்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள சீனிவாச நகரில் இருட்டில் ஒளிரும் தெருவிளக்குதான் இந்த மாணவர்களின் ஒளி விளக்கு. நடைபாதையாகவும் வாகனங்கள் செல்லும் பாதையாகவும் உள்ள இந்த தெருதான் இந்த மாணவர்களின் கல்விக்கூடம். இங்கு 80க்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு மாலை நேரங்களில் கல்வி கற்றுத்தருகிறார் கோமதி.
திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியில் தேர்வுகள் அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு 80க்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு பாடம் கற்றுத்தருகிறார். வசதி வாய்ப்பில்லாத, தினக்கூலிகளாக உள்ளவர்களின் குழந்தைகளே இவரிடம் பாடம் படிக்கிறார்கள்.
ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தனது கனவு, குடும்பச்சூழலால் நிறைவேறாத நிலையில், காலை பத்து மணி முதல் 5 மணி வரை கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு ஆறரை மணி முதல் இரவு 9 மணி வரை இவர் ட்யூசன் எடுக்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் பேர் இவரிடம் கல்வி கற்றுள்ளனர். அவர்களில் பலர் நல்ல வேலையில் இருப்பது தனக்கு பெரும் மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார் ஒரு ரூபாய் டீச்சர் கோமதி