சென்னையில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் வீட்டில் இருந்து 94 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான வடமாநில காவலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், அவரது அண்ணன் மனைவியான இளவரசியும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தை அடுத்த மகாலிங்கபுரத்தில் இல்லம் உள்ளது. சிறையில் இளவரசி உள்ளதால் அவரது வீட்டை அவரது மகனும், ஜெயா டீவியின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் வீட்டை கவனித்து வருகிறார்.
இதனிடையே விவேக் குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த 94 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. வீட்டின் காவலாளியாக பணியாற்றி வந்த அசாம் இளைஞர், தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.