மீண்டும் ஒரு சவரன் 32 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்!
தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 2 நாட்களில் சிறிது குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 19 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 5 ரூபாய்க்கும் ஒரு சவரன் 152 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பங்கு முதலீட்டில் ஆர்வம் காட்டாத முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியதே அதன் விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.
நிலைத்தன்மை இல்லாமல் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் மிகுந்த கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இதனிடையே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும், கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி சார்பில் நேற்று அறிவிப்பு வெளியானது. இது குறித்து மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.