அட்சய திரிதியை ஆர்வம்... தங்க நகை விற்பனை அமோகம் !

அட்சய திரிதியை ஆர்வம்... தங்க நகை விற்பனை அமோகம் !
அட்சய திரிதியை ஆர்வம்... தங்க நகை விற்பனை அமோகம்  !

அட்சய திருதியை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகைக் கடைகளை நோக்கி மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் நகைகள் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. எனவே தான் காலை முதலே நகைக்கடைகளுக்கு ஏராளமான மக்கள், படை எடுத்து வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை நாளை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நகைக் கடைகள் பல சிறப்பு சலுகைகளையும் வழங்கியுள்ளது.  

சென்னை தி.நகரில் காலை முதலே மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், கோவை ராஜவீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம்‌ அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அட்சய திருதியை பிரபலமானதும், அதன் வீச்சு அதிகரித்துள்ளதும், அண்மைக்காலமாகத்தான். பொதுவாக அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவது பெண்கள் தான் என்றாலும், ஆண்களும் இதில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது மறுப்பதற்கில்லை. பொதுமக்களின் நகைத் திருநாளுக்கு, அதன் கொண்டாட்டத்துக்கும் தற்போது நடைபெறும் தேர்தல் குறுக்கே நிற்காது என்றே நம்பலாம். மேலும் கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அட்சய திருதியை நாளன்று 3 முதல் 5 மடங்கு வரை தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்கின்றன தகவல்கள்.

அட்சய திரிதியையொட்டி நகைக்கடைகள் பலவும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தாலும், தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 22 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 176 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு அதிகரித்து 40 ரூபாய் 20 காசாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com