மூதாட்டியிடம் செயின் பறிப்பு - 19 கி.மீ தூரம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடர்களை பிடித்த போலீஸ்..!
சென்னையில் வீட்டு வாசலில் நின்ற மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்து செயினை பறித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குடட்ட தில்லை கங்கா நகர் 28-வது தெருவில் வசித்து வருபவர் வயதான மூதாட்டி ருக்மணி (80). இவர் கடந்த 30-ம் தேதியன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு ஆட்டோவின் பதிவெண் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையெல்லாம் சுமார் 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வு செய்த போலீசார், இறுதியாக ஆட்டோ மணிமங்கலம் பகுதிக்கு சென்றதை கண்டறிந்தனர்.
அதனடிப்படையில் அங்கு சென்று சுரேஷ் மற்றும் குமார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மூதாட்டியிடம் பறித்துச் சென்ற தங்கச்சங்கிலி 2.5 சவரன் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.