“கோகுல்ராஜ் வழக்கில் வீடியோ பதிவு ஒன்று முக்கிய ஆதாரமாக இருந்தது” - அரசு வழக்கறிஞர் பேட்டி

“கோகுல்ராஜ் வழக்கில் வீடியோ பதிவு ஒன்று முக்கிய ஆதாரமாக இருந்தது” - அரசு வழக்கறிஞர் பேட்டி
“கோகுல்ராஜ் வழக்கில் வீடியோ பதிவு ஒன்று முக்கிய ஆதாரமாக இருந்தது” - அரசு வழக்கறிஞர் பேட்டி

கோகுல்ராஜ் கொலைவழக்கில் 'புதியதலைமுறையின் நேர்காணல் வீடியோ பதிவு' வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்தது என்று வழக்கறிஞர் பாப்பா மோகன் பேட்டியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்தக் காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தக்கோரி கோகுல்ராஜ் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணையை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு விசாரணை செய்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் சரணடைந்ததை தொடர்ந்து அவரது கூட்டாளிகள் உள்பட 15 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவ்வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு தொடர்பாக 106 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் இன்று தீர்ப்பளித்தார்.

அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண், குமார் (எ) சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திர சேகர், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை (யுவராஜ் சகோதரர்), சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விபரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் பேசுகையில், “இந்த வழக்கில் அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில், அதில் சிசிடிவி உட்பட 100க்கும் மேற்பட்ட ஆவண பொருட்கள் சமர்பிக்கப்பட்டதாகவும் வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி பிறழ்சாட்சியம் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு நீர்த்து போகும் என்ற நிலையில் புதியதலைமுறையில் யுவராஜ் கொடுத்த சிறப்பு நேர்க்காணல் வீடியோ பதிவு முக்கிய ஆதாரமாக அமைந்தது” என்று தெரிவித்த வழக்கறிஞர் ”கோகுல்ராஜ் கொலை வழக்கில் போதிய சாட்சியம் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு தண்டனை பெற்றுத்தர அரசு தரப்பில் மேல் முரையீடு செய்ய உள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

”இந்தத் தீர்ப்புக்காகவே உயிரோடு காத்திருந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்த தாய் சித்ரா, 10பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற ஆணவ படுகொலை நடக்க கூடாது என்பதற்கு இந்த வழக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com