சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். நிறைவு நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தொழிற் துறை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் தொழில் அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு திரளாக வர உள்ளனர். வாகனம், மென்பொருள், ஜவுளி ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.