"கடன் தவணை அவகாச காலத்தை நீட்டிக்க வேண்டும்"-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்பதை உள்மனதில் வாங்கி, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கெனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் "வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் - வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் - குறிப்பாக, சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது"
“வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் வாடிக்கையாளர்களுக்கு மறந்து போகும்" “வங்கிகளின் நிதி நிலைமையையும் பாதிக்கும்” என்றெல்லாம் இட்டுக் கட்டிய காரணங்களைத் தேடித் தேடிச் சொல்வது, பேரிடர் கால நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ள இயலாதவை. இதே தனிநபர்கள், நிறுவனங்கள் பேரிடருக்கு முன்னர் முறையாகத் தவணைத் தொகைகளைத் திருப்பிச் செலுத்தி வந்ததை ஏனோ ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் மறந்து விட்டு, “கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது” என்ற பிரச்சாரத்தைத் துவங்கியிருப்பது வாடிக்கையாளர் விரோத மனப்பான்மையின் உச்சக்கட்டமாகத் தெரிகிறது. 'வாடிக்கையாளருக்கு முதல் சேவை' என்ற இலக்கணத்திற்கும் விரோதமானது; வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போரின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயல்"
"கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய 'ரொக்கப் பணம்' அல்லது 'வருமானம்' என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும்; அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை - அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை - எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்களையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.