சாக்கில் கட்டிய நிலையில் பெண் சிசு... அரியலூர் அருகே மீட்பு..!
அரியலூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கில் கட்டிய நிலையில் மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கருக்கை - நாகம்பந்தல் கிராம சாலையில் பன்னீர்செல்வம் என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே உள்ள கொல்லை பக்கத்தில் சாக்கில் கட்டிய நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு ஒன்று போடப்பட்டிருந்தது. அக்குழந்தை மீது எறும்புகளும் மேய்ந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 108 ஆம்புலன்ஸ்-க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து குழந்தையை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தில் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை இறந்து விட்டது. குழந்தையை அங்கு போட்டது யார் ? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்