'சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை' - பெற்றோரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகள்!

'சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை' - பெற்றோரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகள்!
'சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை' - பெற்றோரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகள்!

வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைக்காட்டில் தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்து இழந்த சோகத்தில் இரு பெண் குழந்தைகள் தவித்து வருகின்றனர். 


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தனித் தீவாக காட்சியளிக்கும் கிராமம் சிறுதலைக்காடு. இந்த கிராமத்தில் வசித்து வந்த மாரியப்பன், ராணி தம்பதியினருக்கு முத்தரசி (5), சர்வேஸ்வரி (4) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாரியப்பன் நாள்தோறும் சைக்கிளில் மீன்களை ஊர் ஊராக கொண்டு சென்று வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இதனிடையே திடீரென மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த அக்டோபர் 16-ல் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது கணவரை இழந்த ராணி தனது குழந்தைகளை எப்படி வளர்த்து கரை சேர்க்கப்போறோமோ என்ற மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாத சிறுதலைக்காட்டில் ஒரு சுகாரார நிலையம் இருந்திருந்தால் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை அளித்து இருவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 


தாய் தந்தையை இழந்த ஏழை பெண் குழந்தைகள் இருவரும் தற்போது நிற்கதியாக உள்ளனர். ஒரே மாதத்தில் தாய் தந்தை இருவரையும் அடுத்தடுத்து இழந்த சோகத்தில் பால் மனம் மாறாத இந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. அடுத்தவேளை சோற்றுக்குக் கூட அடுத்தவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை சிறு வயதிலேயே இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் தற்போது  பெரியப்பா வீட்டில் உள்ளனர். ஆனால் ஏற்கெனவே 3 குழந்தைகளுடன் வசித்து வரும் தங்களால் மேற்கொண்டு இரு குழந்தைகளையும் காப்பாற்றுவது பொருளாதார ரீதியாக சவாலாக இருப்பதாக பெரியப்பா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் தொண்டுள்ளம் கொண்டவர்களும் உதவி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com