‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது

‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது

‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகனுக்கு இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையை பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கருத்தம்மா’ திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. பல துறைகளில் பல்வேறு சாதனைகளை எட்டிப் பிடித்திருக்கும் இந்தக் காலத்தில்கூட பெண் பிள்ளைகளை சுமையாக கருதும் நிலை நிலவி வருகிறது என்பதை உரக்கக் உலகத்திற்கு கூற முற்படுகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள பெண் சிசுவின் கொலைச் சம்பவம் ஒன்று. 

போச்சம்பள்ளி அருகேயுள்ள பாரூர் நாகர்குட்டை என்னுமிடத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா. இவருக்கு சத்யா என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா - சத்யா தம்பதிக்கு கடந்தாண்டு மே மாதம் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் ராஜாவின் தாய் பொட்டியம்மாள் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் தாயும் சேயும் ‌மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. பச்சிளங்குழந்தை வீட்டுக்குள் வந்து 2 மாதங்கள் கடந்த பின்னரும் 2ஆவது பேத்தி அவருக்கு எட்டிக்காயாக கசந்திருக்கிறது. ஒரு நாள் குழந்தையை பொட்டியம்மாளிடம் விட்டுவிட்டு‌ சத்யா துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது‌. அவர் திரும்பி வந்த போது குழந்தை இறந்து கிடந்ததாக தெரிகிறது. பதறிப்போன தாயிடம் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார் பொட்டியம்மாள். 

வீட்டின் அருகேயுள்ள மலை அடி‌வாரத்தில் குழந்தையையும் அதன் பால் பாட்டிலையும் புதைத்துள்ளனர். சில நாள்கள் கழித்து தடுப்பூசி போடுவதற்காக சத்யாவின் வீட்டுக்கு வந்த அரசு செவிலியர் மங்கை குழந்தை எங்கே எனக்கேட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டது என அவரிடம் கூறியுள்ளார் சத்யா. 

நல்ல உடல் நலத்துடன் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்தது மங்கைக்கு ‌சந்தேகத்தை ஏற்படுத்த வட்டார மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தார். அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் நடத்திய‌ விசாரணையில்தான் வெளிவந்தது அந்தத் அதிர்ச்சித் தகவல். சொந்த பேத்தியை பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து பொட்டியம்மாள் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதை மறைத்து மூச்சுத்திணறலால் குழந்தை இறந்துவிட்டதாக அவர் நாடகமாடியதும் கண்டறியப்பட்டுள்ளது. 

ராஜாவின் வீடு மலை அடிவாரத்தில் இருப்பதால் பாம்பு உள்ளிட்டவை உள்ளே வராமல் இருப்பதற்காக இல்லத்தைச் சுற்றி பூச்சி மருந்தை தெளித்து வைப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. யாருமில்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்தை பாலில் கலந்து பச்சிளங்குழந்தைக்கு பொட்டியம்மாள் கொடுத்து கொலை செய்ததாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. ஆகவே குழந்தையின் உடலை தோண்டி எடுத்த போது அதோடு புதைக்கப்பட்ட பால் பாட்டிலும் கிடைத்திருக்கிறது. அதற்குள் ஒட்டியிருந்த பூச்சி மருந்தின் எச்சம்தான் பொட்டியம்மாள் மீதான குற்றத்தை உறுதி செய்யக் காரணமாக  இருந்ததாக போலீஸ்சார் தெரிவித்துள்ளனர். 

மேலும் உடற்கூராய்வு அறிக்கையும் அதனை உறுதிப்படுத்தவே ஓராண்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் பொட்டியம்மாள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com