செஞ்சி | சிறுமி வழக்கில் திணறும் சிபிசிஐடி.. ஒரு மாதமாகியும் துலங்காத துப்பு..?
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள குளக்கரை தெருவைச் சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களின் 7 வயது மகள் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சரியாக கடந்த மாதம் 11ஆம் தேதி, அதாவது சென்ற மாதம் இதே நாளில் தன் பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடினார் அந்த சிறுமி. இரவு வழக்கம்போல தங்கள் அருகில் உறங்கிப் போன மகளை அதிகாலை 3 மணிக்கு காணவில்லை என பதறியடித்து எழுந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியைக் காணாததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சிறுமியைத் தேட காவல் துறை தனிப்படைகளை அமைத்தது.
மோப்பநாய், சிசிடிவி கேமரா, குற்றப்பின்னணி உள்ளவர்களிடம் விசாரணை, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், ஊரின் நீர்நிலைகள், மலைப்பகுதிகள், புதர்கள், கழிவுநீர் தொட்டிகள், பேருந்து நிலையங்கள், முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் என காவல் துறையின் விசாரணை அனைத்து பக்கங்களிலும் நீண்டாலும் கூட, அது சிறுமி வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை.
10 நாட்கள் காவல்துறை விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால், வழக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 22ஆம் தேதி தொடங்கி சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்து சரியாக 21 நாட்களாகிறது. இந்த 21 நாட்களில், பல கோணங்களிலும் விசாரணை நீண்டது. சிறுமி பயின்ற பள்ளி, அவரது தாய், சுடுகாடு, விளைநிலம், கோயில் பூசாரி, வயர்மேன், குடும்ப உறவினர்கள், வில்லுப்பாட்டு குழு என சிபிசிஐடியும் காவல் துறையினரைப் போல பலவாறாக விசாரணை நடத்தினர். குறிப்பாக சிறுமியைப் பார்த்ததாக பெண் ஒருவர் தெரிவித்ததும், வில்லுப்பாட்டு குழுவினருடன் சிறுமியைப் பார்த்ததாக செய்திகள் வெளியானதும், சிறுமி காணாமல் போன அன்றைய தினம் அதிகாலையில், அதே ஊரில் மூதாட்டி ஒருவர் வீட்டு கதவை மர்ம நபர்கள் தட்டியதாக வெளியான தகவலும் வழக்கில் முன்னேற்றம் தரும் என நம்பப்பட்டது.
ஆனால், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும், “சிறுமி குறித்த முக்கிய தகவல், சிறுமியைப் பார்த்ததாக தகவல், சிறுமி வழக்கில் அதிரடி திருப்பம்” என செய்திகள் வெளியானதே தவிர்த்து, உண்மையில் சிறுமி கிடைக்கவில்லை. சொல்லப் போனால் சிறுமி காணாமல் போன வழக்கின் கோப்புகள் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி வசம் கைமாறியதே தவிர்த்து வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லை.
உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணையில் இறங்கிய பின்னரும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. தற்போது விசாரணை நிலவரத்தைப் பொறுத்தவரை, சிறுமியின் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி அலுவலத்தில் ஐஜி விக்ரமன் தலைமையில், இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்து போலீசாருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டதையும் ஐஜி விக்ரமன் ஆய்வு செய்தார்.
விசாரணை நீண்டாலும்கூட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன குழந்தை ஒன்று, 35 நாட்களுக்குப் பின் ஆந்திர மாநிலத்தில் மீட்கப்பட்டது. இந்த செய்தி மட்டும்தான் தற்போதைக்கு செஞ்சி சிறுமி ஹேமாவதியின் பெற்றோருக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. என்றைக்காயினும் சிறுமி கிடைப்பார் என்ற நம்பிக்கையில், திறந்திருக்கும் வாசலுக்கு வெளியே காத்திருக்கின்றனர் சிறுமி ஹேமாவதியின் பெற்றோர்.
செய்தியாளர்: விக்டர்
