சாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்
திருச்சியில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிரி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு அச்சப்பன் கோயிலில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அச்சப்பன், மதுரை வீரன், அகோர வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பரிவாரங்களுடன் அச்சப்பன் சுவாமி காட்டுக் கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு நீண்ட வரிசையில் அவிழ்ந்த கூந்தலோடு மண்டியிட்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். சாட்டையுடன் அங்கு வந்த பூசாரி உயர்த்திய கைகளுடன் மண்டியிட்ட பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். இவ்வாறு சாட்டையால் பூசாரியிடம் அடி வாங்கினால் திருமணத் தடை அகலுதல், சூனியம், பேய் அகலும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.