நாயில்லாமல் நாடு திரும்ப மாட்டோம்.. ஜெர்மன் தம்பதி மெரினாவில் தவிப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் திருடப்பட்ட வளர்ப்பு நாயை ஜெர்மன் நாட்டு தம்பதியர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபன் காக்ரா மற்றும் அவரது மனைவி இருவரும் இந்தியாவிற்கு அண்மையில் தங்கள் நாயுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கடந்த சனிக்கிழமையன்று தங்கள் செல்ல நாயான லூக் உடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது வளர்ப்பு நாயை அவர்களது காருக்கு வெளியே கட்டி வைத்து விட்டு இருவரும் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காருக்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த அவர்களது செல்ல நாய் காணாமல் போயிருந்தது. இதனால் பதறிய அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து தங்களது நாயை திருடிச் சென்றுவிட்டதாக ஜெர்மனி தம்பதியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் அளிப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக சமூக வலைதளங்களில் அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பல வழிகளிலும் தங்களது நாயை அவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். தங்களது செல்ல நாயின் மீது வைத்திருந்த பற்றால் அதனைப் பிரிய முடியாமல் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு அதை அழைத்து வந்துள்ளனர். இங்கு அந்த நாய் காணாமல் போனதால் அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தங்களது செல்ல நாயில்லாமல் எப்படி நாடு திரும்புவது என அவர்கள் தவித்து வருகின்றனர்.